கட்டுரை

விசுவாசிகளின் மோதல்

Staff Writer

டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2001  சட்டமன்றத் தேர்தலின் போது ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில்  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால் அவர் தண்டனை பெற்றதால் போட்டியிட தகுதி இல்லை என்று அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் அதிமுக வெற்றி பெற்று அவர் 2001,மே மாதம் 14- ஆம் தேதி முதல்வர் ஆனார்.

அப்போதைய ஆளுநர் பாத்திமா பீபி அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அவர் பதவி ஏற்றது செல்லாது என உச்ச  நீதிமன்றம் சொல்லிவிடவே, அவர் செப்டம்பர் 21- ஆம் தேதி பதவி விலகினார். அதிமுகவில் இருந்து வேறு ஒருவரை முதல்வராக தெரிவு செய்யவேண்டும். யாருக்கு வாய்ப்பு என்பது பற்றி ஏகப்பட்ட ஊகங்கள். அன்று காலை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. யார், யார், என்று தவித்துக்கொண்டிருந்தனர் பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும். நாம் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த செய்திப்பத்திரிகை அன்று அச்சுக்கு அனுப்பப் படவேண்டிய தினம். எமது மூத்த செய்தியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்போகிறார்கள் என்று சின்ன க்ளூ கூட இல்லை. மூன்று செய்தியாளர்கள் இதற்காக களத்தில் செய்தி சேகரிக்கப்போயிருந்தார்கள். கூட்டம் முடிந்ததும் அவர்கள் சொன்ன பெயர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர். யார் பன்னீர் செல்வம்? இதுதான் எங்கள் ஆசிரியர் குழுவில் கேட்ட கேள்வி. அவர் புகைப்படம் ஏதும் எங்கள் அலுவலகத்தில் இருந்திருக்கவில்லை. எமது செய்தியாளர் ஒருவர் மிகவும் தயக்கத்திலும் பணிவின் உச்சத்திலும் இருந்த முதல்வரை கையைப்பிடித்து இழுத்து வந்து புகைப்படத்துக்கு நிற்க வைத்ததாகக் குறிப்பிட்டார். தமிழ்நாடு அதுவரை கண்டிராத காவியப் பணிவு கொண்ட தொண்டராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். தலைவர்களை நேரில் வணங்குவது மட்டுமில்லாமல் புகைப்படங்களைக் கண்டாலே பணிவு காட்டி வணங்குவது என்கிற பழக்கம் அதிமுகவில் அன்றிலிருந்து தொடங்கியது.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா அமர்ந்த முதல்வருக்கான இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்ததே இல்லை. எந்த விதத்திலும் எந்த கேள்விக்கும் அவர் ஜெ. இருந்தவரை  பதில் அளித்ததோ, தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதோ கிடையாது. தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் இப்படியொரு விசுவாசமிக்க தொண்டர் இருக்கமுடியுமா  என்றால் சந்தேகம்தான்.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை தண்டனையில் இருந்து 2001 டிசம்பர் மாதம் விடுவித்தது. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா 2002  மார்ச் மாதம்  அரியணை ஏறினார். அதுவரை பன்னீர்செல்வம் அரியணையை தன் தலைவிக்காகப் பாதுகாத்தார். பரிசாக பின்னாட்களில் அவருக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடமும் நிதியமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.  “சாதாரணமான நேரமாக இருந்திருந்தால் அமைச்சர் பதவி கூட அவருக்கு அளித்திருப்பார்களா  என்பது சந்தேகமே. முதன்மையான  விசுவாசி தேவைப்பட்டபோது டிடிவி தினகரன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் ஓபிஎஸ். ஜெவுக்கு எதிராகத் திரும்பும் எந்த வல்லமையும் அவருக்குக் கிடையாது. அதனால்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும் கவனிக்கவேண்டும்’ என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது லட்டு தின்னும் வாய்ப்பும்(அப்போது இந்த சொற்றொடர் அதிகமாக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டது) 2014-ல் வழங்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா நான்காண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் வழங்கியதை அடுத்து முதல்வர் பதவியைத் துறந்து ஜெயலலிதா பெங்களூரு சிறைக்குச் சென்றார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஜெ.வுக்கு மக்கள் முதல்வர் என்ற பட்டத்தை ஜெயா டிவி வழங்கியது. மக்கள் முதல்வர் ஆணைப்படி ஓபிஎஸ் பணிகளை  மேற்கொண்டார். ஆனால் இந்த முறை பழைய பணிவே  தொடர்ந்தாலும் கூட, மீண்டும் ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டு மே 2015-ல் மீண்டும் முதல்வர் ஆனார். அதன் பின் ஓபிஎஸ்ஸின் சிறகுகளை கொஞ்சம் வெட்டிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பறிக்கும் மனிதர்கள் நிறைந்த உலகில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அற்புதவிசுவாசி பன்னீர் செல்வம்.

இதே பாணியை பீகாரில் நிதீஷ்குமார் கடைப்பிடிக்க முயன்று மாஞ்சி என்பவரை முதல்வர் ஆக்கினார்.  ஆனால் மாஞ்சி விசுவாசி அல்ல. பாஜகவுடன் கை கோர்த்தார். நிதீஷ்குமார் படாதபாடுபட்டு முதல்வர்  பதவியைத் திரும்பப் பெற வேண்டி இருந்தது.

உலக அளவில் பார்த்தால் ஜெ- பன்னீருடன்  சமகாலத்தில் ஓரளவுக்கு ஒப்பிடக்கூடிய ஓர் இணை இருக்கிறது. அது புடின் - மெட்வடேவ். ரஷ்யாவில் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக ஒருவர் அதிபர் பதவியில்  இருக்க முடியாது. இரண்டுமுறை அதிபராக பதவி வகித்த புடின், பிரதமராக இருந்த மெட்வடேவை அதிபர் பதவிக்குப் போட்டியிட வைத்து வெல்ல வைத்தார்.   மெட்வடேவ் வகித்த பிரதமர் பதவியை புடின் தானே வகித்தார். மீண்டும் ஐந்தாண்டு காலம் ஆனபின்னர் புடின் மீண்டும் அதிபர் ஆனார். மெட்வடேவ் தன் தலைவருக்காக அரியணையைக் காப்பாற்றி வைத்திருந்தார். தலைவர்கள் இதுபோன்ற விசுவாசிகளைக் கண்டறிவது மிகச்சிரமம். ஜால்ராக்கள் கிடைப்பார்கள். விசுவாசிகள் அரிதானவர்கள். அதிகாரம் என்பது மனித மனத்தைக்  கெடுக்கும் மிக மோசமான கருவி.

ஒரு விசுவாசியின் கதை இப்படி இருக்க இன்னொரு விசுவாசியும் தோழியுமான சசிகலா ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர். ஜெ. சொந்த உறவினர்களை விட சசியின் உறவினர்களையே நம்பினார். ம. நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன்,  என எல்லோரும் ஒரு காலத்தில் ஜெவின் நம்பிக்கையைப் பெற்றவர்கள். அதை இழக்கவும் செய்தார்கள். ஜெயலலிதா பல வழக்குகளில் சிக்கியபோதும் இந்த குடும்பத்தினர் யாரும் எந்த இடத்திலும் அவரைக் காட்டிக்கொடுக்காத விசுவாசிகளாக இருந்தனர். அத்துடன் அதிமுகவின் வெளியே தெரியாத சக்திகளாக இயங்கினார்கள். 96-ல் மாபெரும் தோல்வியையும் மக்கள் எதிர்ப்பையும் ஜெயலலிதா பெற்றபோது சசிகலாவை சிலகாலம் துறந்தார். பின்னர் சேர்த்துக்கொண்டார். 2011ல்  சொத்துக் குவிப்பு வழக்குக்காக பெங்களூரு சென்றபோது சசிகலாவின் உறவினர்கள் அவரைச் சந்தித்தனர். ஏதோ திட்டம் போடுகின்றனர் என்று ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை சொன்னதாகவும் அதை அடுத்துத்தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்கள் 12 பேரை கட்சியை விட்டு நீக்கினார் என்று சொல்லப்பட்டது. சிலரை கைத்து செய்து சிறையிலும் போட்டார். தமது நிறுவனப் பொறுப்புகளில் இருந்து அவர்களை நீக்கவும் செய்தார். ஆனால் சசியின் அண்ணன் மனைவி இளவரசி, அவரது மகன் விவேக் இருவரும் ஜெவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக தொடர்ந்து  நீடித்தனர். பின்னர் சில மாதங்களில் சசிகலா மீண்டும் ஜெவுடன் இணைந்துகொண்டார். இடையில் என்ன நடந்தது? சசியை வெளியேற்ற உண்மைக் காரணம் என்ன? அரண்மனை ரகசியங்கள் பெரும்பாலும் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இந்நிலையில்தான் ஜெவின் உடல்நிலை குன்றுகிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  வெளி ஆள் தவிர யாரும் பார்க்காமல் மரணம் அடைகிறார். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் அவர் கட்டைவிரலை உயர்த்திக் காட்டியதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். ஆனால் அவரே ஜெ.வைப் பார்க்கவில்லை என்றுதான் முதலில் செய்தி பரப்பப்பட்டது.  யாரையும் சந்திக்க ஜெ.விரும்பாதது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதைத் தொடர்ந்து மக்களிடையே பரவிய கருத்துகளும் சசிக்கு எதிரான வெறுப்புணர்வும் அனைவரும் அறிந்ததே.

ஜெ. இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்று இரவே பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவருக்கு எந்தவிதத்திலும் கட்சிக்குள்ளும் அமைச்சரவையிலும் ஆதரவு அளிக்கப்படுவது இல்லை. ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கச் சென்ற முதல்வரை அலங்காநல்லூர் மக்கள் திருப்பி அனுப்புவதை அவரது கட்சி பார்த்து உள்ளூர சிரித்துக் கொள்கிறது. பின்ன அவர் முன்மொழிய சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் அனுப்புகிறார். இந்த நிலையில் திடீரென்று விழித்துக்கொள்ளும் உச்சநீதிமன்றம்  சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அடுத்தவாரம் என்று அறிவிக்கிறது.

பன்னீரைப் பொறுத்தவரை ஒரு கட்டம் வரை அவர் சசிகலாவுக்கும் விசுவாசியாகவே இருந்தார். ஆனால் ஜெ.மரணத்துக்குப் பின்னால் சமநிலைகள் குலைந்துவிட்டன. இந்நிலையில் மக்களிடம் இருக்கும் சசி எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி ஓபிஎஸ் புரட்சி செய்ய முடிவு செய்கிறார். அவருக்கு வேண்டிய ஆதரவு வடக்கே இருந்து கிடைத்ததாகச் சொல்லப் படுகிறது. ஜெ.வின் சமாதியில் செய்யப்பட்ட நாற்பது நிமிட  தியானமும், அது மக்களிடையே உருவாக்கிய எதிர்பார்ப்பும்  பன்னீர் தன் புரட்சிக்கான அறைகூவலை அறிவித்ததை கடந்த கால்நூற்றாண்டின் மிகச் சிறந்த மக்கள்தொடர்பு நிகழ்வாக ஆக்கின. ஆனால் அதன்பிறகும் கூட சசிகலாவின் கட்சி மீதான பிடியைக் குலைக்க முடியவில்லை. இப்போது எடப்பாடியாரை  முதல்வராக ஆக்கிவிட்டு  சிறைக்குள்  சசிகலா இருக்கிறார். எங்கே இருந்தாலும் என் இதயம் உங்களுடன் தானிருக்கும் என்று கூறிவிட்டு அவர் போய்விட்டார். அதிமுக பொதுச்செயலாளர் சிறையில் இன்னும் நான்காண்டுகளைக் கழிக்கவேண்டியிருக்கும் என்பது இப்போதைய நிலை.

ஜெயலலிதாவின் சிறந்த விசுவாசி யார்? பன்னீரா? சசிகலாவா என்கிற திசையில்தான் அதிமுகவின் அரசியல் இன்னும் கொஞ்சகாலம் சென்று கொண்டிருக்கும்.  “நல்லவேளை, உச்சநீதிமன்றத் தீர்ப்பு அம்மா மரணத்துக்குப் பின்னால் வந்தது. அந்த அளவுக்கு நிம்மதி” என்றுதான் அதிமுக தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தலைவி குற்றவாளி என்பதால் அவரைப் புறக்கணிக்கும் எண்ணமெல்லாம் வரவே போவதில்லை.  “குற்றவாளி என்பதால் நம் சொந்த அம்மாவைப் புறக்கணிக்க முடியுமா?அதுபோலத் தான் இதுவும் ” என்று கூறுகிறார் அதிமுக தொண்டர் ஒருவர்.

ஆனால் பொதுமக்கள் முன்னிலையில் இந்த தீர்ப்பு உருவாக்கப்போகின்ற விளைவுகள் கடுமையாகவே இருக்கும். இளம் வாக்காளர்கள் இதை எப்படி அணுகுவார்கள்? இதனால் உருவாகும் அரசியல் சூழலை இப்போதைய எதிர்க்கட்சியான திமுக தனக்குச் சாதகமாக திசை திருப்ப முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே சொல்லவேண்டும்.

இந்த குழப்பத்தில் அதிமுக திமுக இல்லாத மூன்றாவது சக்தி எதுவும் ஆதாயம் பெற இயலுமா?   “ அதிமுக, திமுகவைத் தவிர அடிப்படைக் கட்டுமானம் உடைய கட்சி எதுவும் இங்கே இல்லை. அதைச் செய்யக்கூடிய  முனைப்புடன் கூடிய தலைமை எதையும் வேறு கட்சியில் காண முடியவில்லை. வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்ட தலைவர்களாகவே பிற கட்சியில் இருக்கும் தலைவர்கள் உள்ளார்கள். பாஜகவும்  காங்கிரஸும் இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் வளர்ச்சி பெறுவார்கள் என்பதற்கான அறிகுறிகளோ அதற்கான திட்டங்களோ இல்லை. அதிமுகவில் தற்போது நடைபெறும் குழப்பங்களால் அதிமுக தொண்டர்கள் வெறுப்படைந்துள்ளனர். எத்தனை அணிகள் உருவானாலும் இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அவர்களே வலுவாக இருப்பார்கள். திமுகவுக்கு எதிராக வலுவாக செயல்பட வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதால் அதிமுகவின் பிளவுகள் தாற்காலிகமாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான  ப்ரியன்.

 தற்போதைய சூழலில் திமுகவின் செயல் தலைவர் முக ஸ்டாலினுக்கு இணையான  அனுபவமும் மக்கள் ஏற்பும் பெற்ற தலைவர் யாரும் இல்லை.  இந்த சூழலை அவர் எப்படிக் கையாளுகிறார் என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்களில் அலை எந்த பக்கம் அடிக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்! அதில்தான் பொதுமக்களின் உணர்வுகள் வெளிப்படக்கூடும்.

மார்ச், 2017.